புதுவண்ணாரப்பேட்டையில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது - காசிமேட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை


புதுவண்ணாரப்பேட்டையில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது - காசிமேட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
x

புதுவண்ணாரப்பேட்டையில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. காசிமேட்டில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

சென்னை

சென்னையில் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் 18 தெருக்கள் உள்ளது. தொடர் மழையால் இங்குள்ள சுமார் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

ஒவ்வொரு மழை காலத்திலும் இதே நிலை தொடர்வதால் இதற்காக பெரும்பாலான வீடுகளில் சொந்தமாக சிறிய மின் மோட்டாரை வாங்கி வைத்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாதிக்கப்பட்ட மக்களே ஆபத்தான முறையில் சிறிய மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பகுதியில் மழைநீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அங்குள்ள பழமையான குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகாமையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இருந்து மீன்பிடி படகுகளுக்கு டீசல் வழங்கக்கூடாது என்று வாய்மொழி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீனவர்கள் கடந்த 4 நாட்களாக விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து 1500 விசைப்படகு மற்றும் 700 பைபர் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் இருந்து பைபர் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் படகுகளை கரை ஓரங்களில் பாதுகாப்பாக தூக்கி நிறுத்தி கட்டி வைத்துள்ளனர்.

இதனால் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு அனைத்து மீனவர்கள் நலச்சங்க தலைவர் நாஞ்சில் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவொற்றியூர், மணலி, எண்ணூர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் வீடுகள் மற்றும் சாலை ஒரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியில் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று காலை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து விழுந்த கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாலும், அதில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

தகவல் அறிந்ததும் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி கமிஷனர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கி கிடக்க தண்ணீரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மழைநீர் அகற்றப்பட்டது.


Next Story