நூலகத்தில் மழைநீர்... வருத்தத்தில் வாசகர்கள்


நூலகத்தில் மழைநீர்... வருத்தத்தில் வாசகர்கள்
x

சோலையாறு நகரில் புத்தகங்களுக்கு சோதனையாக நூலகத்தில் மழைநீர் கசிகிறது. இதனால் வாசகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

சோலையாறு நகரில் புத்தகங்களுக்கு சோதனையாக நூலகத்தில் மழைநீர் கசிகிறது. இதனால் வாசகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஊர்ப்புற நூலகம்

கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நகரின் மையப்பகுதியில் நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தை மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நூலகத்தை தவிர வேறு எந்த எஸ்டேட் பகுதியிலும் நூலகம் கிடையாது. எனினும் சோலையாறு நகரில் மட்டும் ஊர்ப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை சோலையாறு நகர், உருளிக்கல், பன்னிமேடு, முருகாளி, சேக்கல்முடி, கல்யாண பந்தல், புதுக்காடு மற்றும் கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

புத்தகங்களை பாதுகாப்பது சவால்

ஆனால் அந்த நூலகம் செயல்பட்டு வரும் கட்டிடம், முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அங்கு தினக்கூலி அடிப்படையிலேயே நூலகர் பணியாற்றி வருகிறார். கட்டிடத்தின் மேற்கூரை மட்டுமின்றி பக்கவாட்டு சுவர்களில் இருந்தும் மழைநீர் கசிகிறது. இதனால் புத்தகங்களை பாதுகாப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது.

இது தவிர அங்கு போதிய இருக்கை வசதி இல்லை. மின் இணைப்பு கூட கிடையாது. எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், அந்த நூலகத்தை பயன்படுத்தி வரும் வாசகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது:-

சோலையாறு நகரில் உள்ள நூலகத்தை மாணவ-மாணவிகள், போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள் உள்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. எனவே கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு அதிகாரிகள் நேரில் வந்து, அந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து கட்டிடத்தை பராமரித்து, மின் இணைப்பு உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story