கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் கசியும் மழைநீர்-நோயாளிகள் அவதி


கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் கசியும் மழைநீர்-நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்துக்குள் மழைநீர் வழிந்தோடுவதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்துக்குள் மழைநீர் வழிந்தோடுவதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆஸ்பத்திரி கட்டிடத்துக்குள் மழைநீர்

கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி மேல் கூடலூரில் செயல்பட்டு வருகிறது. கூடலூர் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் மட்டுமின்றி பந்தலூர் பகுதி மக்களும் தினமும் ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகள் தங்கும் கட்டிடத்துக்குள் மழை நீர் வழிந்தோடுகிறது. தொடர்ந்து அவர்களின் படுக்கைகள் மீது கட்டிடத்தின் மேல் தேங்கி நிற்கும் மழை நீர் கசிந்து சொட்டு சொட்டாக விழுகிறது. இதனால் அறைகள் முழுவதும் ஈரத்துடன் காணப்படுகிறது.

நோயாளிகள் அவதி

தொடர்ந்து காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளான நோயாளிகள் தண்ணீர் கசியும் வார்டு அறைகளில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே காலநிலை மோசமாக உள்ளதால் குளிரில் சிரமத்துடன் சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து நோயாளிகள் கூறும் போது, ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மேற்புறம் மழைநீர் பல நாட்களாக தேங்கி இருப்பதால் வார்டுகளில் தங்கி உள்ள நோயாளிகளின் அறைகளுக்குள் மழை நீர் வழிந்து ஓடுகிறது.சில சமயங்களில் கையில் குடைகளை பிடித்தவாறு இருக்க வேண்டியதாக உள்ளது. ஏற்கனவே குளிர் அதிகமாக உள்ள சூழலில் ஆஸ்பத்திரி அறைகளிலும் ஈரத்தன்மை இருப்பதால் குளிர் மேலும் அதிகரித்து உள்ளது. எனவே மழைநீர் அறைக்குள் வராத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story