வயல்களில் மழைநீர் தேங்கி அழுகிக்கிடக்கும் வைக்கோல்


வயல்களில் மழைநீர் தேங்கி அழுகிக்கிடக்கும் வைக்கோல்
x
தினத்தந்தி 20 Oct 2023 2:59 AM IST (Updated: 20 Oct 2023 3:03 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி வைக்கோல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனை கால்நடைகளுக்கு மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், உழுது பயிரிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்

இலக்கை தாண்டிய குறுவை

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்பட்டது. அதாவது 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி 1 லட்சத்து 96 ஆயிரத்து 215 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

இதில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆற்று நீரை நம்பி சாகுபடி செய்த வயல்களில் கதிர் வரும் தருவாயில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல இடங்களில் பயிர்கள் காய்ந்தன. இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது.

அழுகி காணப்படும் வைக்கோல்

இந்த நிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் காய்ந்த பகுதிகளை தவிர இதர பகுதிகள் மற்றும் பம்புசெட் மூலம் சாகுபடி செய்யப்பட்ட ஒரு சில இடங்களிலும் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை எந்திரங்கள் மூலம் நடைபெறுவதால் வைக்கோல் சிறிய அளவிலான துண்டுகளாக வயல்களில் கிடக்கின்றன. இதனை வைக்கோல் கட்டும் எந்திரம் மூலம் கட்டுவது வழக்கம். ஒரு கட்டு 25 கிலோ எடை வரை இருக்கும்.

ஆனால் தற்போது மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வைக்கோல் தண்ணீரில் நனைந்தும், மூழ்கியும் அழுகிய நிலையில் காணப்படுகிறது. அதனை மீண்டும் சேகரித்து கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை தான் உள்ளது. இதனால் வைக்கோல்களுடன் உழவு செய்து மீண்டும் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மீண்டும் உழுது பயிரிட முடிவு

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் நெல் அறுவடை செய்த பின்னர் வைக்கோல்களை, கால்நடைகளை வளர்ப்பவர்கள் வந்து வாங்கிச்செல்வார்கள்.அதுவும் விவசாயிகள் சாகுபடி செய்த வயலுக்கே வந்து வாங்கி செல்வார்கள். 25 கிலோ கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி அவர்களே வைக்கோலை கட்டி எடுத்துச்செல்வார்கள். மேலும் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வந்து வாங்கிச்செல்வார்கள்.

ஆனால் மழை பெய்து வருவதால் அறுவடை செய்த வயல்களில் வைக்கோல் நனைந்தும், தண்ணீரில் மூழ்கியும் அழுகி காணப்படுகிறது. இதனால் தற்போது வைக்கோல் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் மழையில் நனைந்து அழுகி காணப்படும் வைக்கோலை மீண்டும் கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மண்ணிற்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் அதனை அப்படியே போட்டு உழுது மீண்டும் சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றனர்.


Next Story