பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்; டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்


பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்; டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்
x

பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம்

தேங்கி நிற்கும் மழைநீர்

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட நண்பர்கள் நகர் பகுதியில் நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு வயதானவர்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவும், சிறுவர்கள் விளையாடவும் வசதிகள் இருப்பதால் தினமும் மக்கள் கூட்டம் நிறைந்து இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பூங்கா முழுவதும் மழைநீர் புகுந்து விட்டது.

ஆனால் மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் பூங்காவில் மழைநீர் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரை அகற்ற கோரி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மழைநீர் தானாக வடியும் வரை நகராட்சி அதிகாரிகள் காத்திருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

டெங்கு கொசுக்கள்...

வீட்டை சுற்றி உள்ள காலி இடங்களில் பழைய டயர்கள், தேங்காய் ஓடு உள்ளிட்டவைகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நின்றால் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலிக்கிறது. ஆனால் தற்போது பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பூங்காவில் குளம்போல் தேங்கி உள்ள மழைநீரில் டெங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் யாரிடம் அபராதம் வசூலிப்பார்கள்? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் சிறுவர்கள் யாரும் பூங்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டும் ஒருவித அச்சத்துடன் பூங்காவில் நடைபயிற்சி மட்டும் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள், சிறுவர்கள் பயன்படுத்தும்விதமாக பூங்காவில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story