பூக்களின் விலை திடீர் உயர்வு


வரலட்சுமி நோன்பு வருவதையொட்டி நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.

திருப்பூர்

திருப்பூர்

இன்று(வெள்ளிக்கிழமை) வரலட்சுமி நோன்பு வருவதையொட்டி நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.

விலை உயர்வு

திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை ஓரளவு குறைவாக இருந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) வரலட்சுமி நோன்பு வருவதையொட்டி நேற்று பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரூ.500 முதல் ரூ.700 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை ரூ.480-க்கும், ஜாதிமல்லி ரூ.400, அரளிப்பூ ரூ.200, பட்டுப்பூ ரூ.80, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.320, ஸ்டார் ரோஜா பூக்கள் ரூ.320, சிகப்பு ரோஜா ரூ.300, சம்பங்கி ரூ.200, செவ்வந்தி ரூ.180 முதல் ரூ.240 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

செவ்வந்தி வரத்து அதிகரிப்பு

விலை அதிகமாக இருந்த போதிலும் நேற்று பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் பூக்களை வாங்கி சென்றனர். ஓணம் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திருப்பூர் மார்க்கெட்டிற்கு செவ்வந்தி பூ வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று சுமார் 3 டன் செவ்வந்தி பூ வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 2 தினங்களில் இதன் வரத்து மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர். வரத்து அதிகரித்தாலும், ஓணம் பண்டிகை நாள் நெருங்கும் நிலையில் செவ்வந்தி பூக்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



Related Tags :
Next Story