கரைகளை உயர்த்தி பூண்டி ஏரியில் 5 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க திட்டம் - அதிகாரிகள் குழு ஆய்வு


கரைகளை உயர்த்தி பூண்டி ஏரியில் 5 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க திட்டம் - அதிகாரிகள் குழு ஆய்வு
x

பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமித்து வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

திருவள்ளூர்

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளில் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

இதில் பூண்டி ஏரியில் 3.231 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதனால் சுமார் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. சென்னை மக்களின் 1 வருட குடிநீர் சராசரி தேவை 12 டி.எம்.சி. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல திட்டங்கள் வகுத்துள்ளனர். குறிப்பாக பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக மண் தரம் மற்றும் தரை கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்கள் ஸ்ரீதரன், குமரன், திட்டம் வடிவமைப்பு வாரிய செயற்பொறியாளர் சுரேகா தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

இந்த குழு தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அரசு நிதி ஒதுக்கிய பின்னர் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க வைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

இதனிடையே திருவள்ளூர் அருகே உள்ள ராமஞ்சேரியில் 20 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திறனுள்ள பிரம்மாண்ட அணை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஏரி கட்டப்பட்டால் சென்னையில் கோடை மற்றும் இதர காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.


Next Story