சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் - டிடிவி தினகரன்


சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் - டிடிவி தினகரன்
x

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழில் அமைப்புகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே, கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பெரும் சரிவை சந்திந்த நிலையில், வணிக நிறுவனங்களுக்கு அண்மையில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வோடு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலைக்கட்டண உயர்வும் அவர்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதை தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் போராட்டம் மூலமாகவே உணர முடிகிறது.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கபட்டு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெறுவதோடு தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story