சிறு,குறு தொழில்களுக்கு உயர்த்திய மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கருப்பு பேட்ச் அணிந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைத்தீர்க்கும் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர், மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 639 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகளையும் கலெக்டர் வழங்கினார்.
கோரிக்கை மனு
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் துறை நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சிங்கம்புணரி கயிறு மற்றும் கயிறு தொடர்பான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களின் கூட்டமைப்பு தலைவர் பிரகாஷ், செயலாளர் அஜ்மல் கான், பொருளாளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்திடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது,
மின்கட்டணம்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கிறோம். கடந்த ஒரு வருடமாக 40-லிருந்து 50 சதவீதம் வரை செய்த உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் ஏற்கனவே நாங்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம். எனவே மின் நிலை கட்டணம் பழைய கட்டணமான ரூ.35-க்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நுகர்வோர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பீக் அவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், மேற்கூரை சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.