புயல் மழையிலும் நிரம்பாமல் குட்டைபோல் காட்சியளிக்கும் ராஜாதோப்பு அணை


புயல் மழையிலும் நிரம்பாமல் குட்டைபோல் காட்சியளிக்கும் ராஜாதோப்பு அணை
x

லத்தேரியை அடுத்த செஞ்சி ராஜாதோப்பு அணை, புயல் மழையிலும் நிரம்பாமல் குட்டைபோல் காட்சியளிக்கிறது. மோர்தானா இடதுபுற கால்வாயை அணையுடன் இணைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

லத்தேரியை அடுத்த செஞ்சி ராஜாதோப்பு அணை, புயல் மழையிலும் நிரம்பாமல் குட்டைபோல் காட்சியளிக்கிறது. மோர்தானா இடதுபுற கால்வாயை அணையுடன் இணைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜாதோப்பு அணை

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மோர்தானா அணைக்கு அடுத்த நிலையில், பெரிய அணையாக கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி ராஜாதோப்பு அணை உள்ளது. இது தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் மலைப்பாங்கான நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர், நேரடி மழைநீர் ஆகியவற்றை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 119.20 மில்லியன் கன அடியாகும். மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

அதன் ஒருபகுதி நீர் இடதுபுறக் கால்வாய் வழியாக லத்தேரி வரை சென்று அங்குள்ள ஏரியில் முடிகிறது. இந்த கால்வாயின் கிளை ராஜாதோப்பு அணையுடன் இணைக்கப்படவில்லை. உபரி நீரும், மலைப்பகுதியின் மழைநீரும் மட்டுமே அணைக்கு வருவதால் ராஜா தோப்பு அணை நிரம்பாமல் குறைந்த அளவு தண்ணீருடன் குட்டைபோல் காணப்படுகிறது.

கால்வாயை இணைக்க வேண்டும்

மோர்தானா அணையின் இடதுபுறக் கால்வாயில் கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இப்படி வெளியேறும் உபரிநீர், கால்வாய் கசிவுநீர் ஆகியவை காங்குப்பம் ஊருக்குள் நுழைந்து அரசு பள்ளியைக் கடந்து சாமியார் மடத்திற்குள் ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும் கால்வாயைக் கடந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு அமைந்துள்ள தெருவின் நுழைவுப் பகுதி வழியாக சாலையின் இரண்டு பக்கங்களிலும் சென்றுகொண்டு இருக்கிறது.

இதனால், அப்பகுதிகளில் பாசிபடர்ந்து அந்த வழியே செல்வோர் அடிக்கடி வழுக்கி விழும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க மோர்தானா அணைக் கால்வாயின் கரைகளை குறிப்பிட்ட இடங்களில் உயர்த்த வேண்டும். மேலும் கால்வாயை ராஜாதோப்பு அணையுடன் இணைக்க வேண்டும் என்பது இந்தப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story