தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு


தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு
x

தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

புதுடெல்லி,

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ரிட் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி ராஜேந்திர பாலாஜி பயணிக்கக் கூடாது என கடந்த ஜனவரி 12-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கடந்த செப்டம்பர் 12-ந்தேதி விசாரித்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இடைக்கால ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்ததுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழக முழுவதும் பயணம் செய்யவும், கடவுச்சீட்டை புதுப்பிக்கவும் அனுமதி அளித்தது.

மேலும், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது. அதன்படி கடந்த 1-ம் தேதி இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, நாடு முழுவதும் பயணம் செய்யும் வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரிட் மனுவை விசாரிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி, வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் தொடரக்கூடாது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனு மீதான இறுதி விசாரணையை நவம்பர் 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி வேண்டும் என ஜாமீன் நிபந்தனை தளர்வு கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

மேலும், பணமோசடி வழக்கில் 45 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story