நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் பொறுப்பேற்பு


நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் பொறுப்பேற்பு
x

நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜேந்திரன், சட்டம்- ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜேந்திரன், சட்டம்- ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

புதிய போலீஸ் கமிஷனர்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த அவினாஷ்குமார் சென்னைக்கு பணிமாறுதல் பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் நேற்று காலையில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர், தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1999-ம் தேர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை உட்கோட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக காவல்பணியை தொடங்கினார்.

2006-ம் ஆண்டு போதைபொருள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். 2007-ம் ஆண்டு மதுரை அமலாக்கத்துறை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஈரோடு சிறப்பு அதிரடி படை போலீஸ் சூப்பிரண்டு, கோவை சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர், திருச்சி சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தென்சென்னை பெருநகர போக்குவரத்து, சென்னை மயிலாப்பூர், சென்னை பெருநகர போக்குவரத்து கிழக்கு, சென்னை மாதவரம், சென்னை கீழ்பாக்கம், சென்னை பூக்கடை பஜார் ஆகிய இடங்களில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியுள்ளார்.

மதுரை சரக டி.ஐ.ஜி.

2020-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர் சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும் தென்சென்னை பெருநகர போக்குவரத்து இணை கமிஷனராக பணியாற்றினார். தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார்.

சட்டம்- ஒழுங்கிற்கு முக்கியத்துவம்

புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;-

நெல்லை மாநகர பகுதிகளில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுகுறித்து எந்த நேரமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் கொடுக்கலாம். இதுபோன்ற செயல்களை தடுக்க மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் தகவல் ரகசியமாக வைக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையுடன் காவல்துறையும் இணைந்து பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் காவலர்களுக்கு அவர்களின் உடையில் மாட்டிக்கொள்ளும் சிறிய வகை கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அதில் பதிவாகும் காட்சிகளை கொண்டு காவலர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். காவலர்கள் சரியாக நடந்து கொள்ளும் போது யாரும் அவர்களை எதுவும் செய்ய முடியாது. எனவே உடையில் மாட்டிக்கொள்ளும் கேமராக்கள் கூடுதல் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story