நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்; திருச்சியில் சத்தியநாராயணராவ் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்; திருச்சியில் சத்தியநாராயணராவ் பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்று திருச்சியில் சத்தியநாராயணராவ் கூறினார்.

திருச்சி

ஜெயிலர் திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினியின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் நேரடியாக சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சத்தியநாராயணராவ் வந்து ஜெயிலர் படம் பார்த்தார். அதன்பிறகு அவர் அங்கு திரைப்படத்தின் வெற்றி குறித்து கேட்டறிந்ததோடு, ரசிகர்களை சந்தித்து கேக் வெட்டி இனிப்புகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து சத்தியநாராயணராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டார்

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ரஜினிக்கு மட்டுமே மக்கள் அளித்தது. பல ஆண்டுகளாக அந்த பட்டம் அவரிடம் உள்ளது. அவர் இருக்கும்வரை அந்த பட்டம் வேறு யாருக்கும் கிடையாது. ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதுபோல் இன்னும் நிறைய படங்களில் அவர் நடிக்க இருக்கிறார். அதற்கு காரணம், திரை உலகத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக ரஜினி தொடர்ந்து நடிப்பார்.

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு தர மாட்டார். அதேநேரம் ரஜினி அரசியலுக்கும் வரமாட்டார். ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு ஓட்டு போட்டு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.


Next Story