ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்கள் மனநலன் காக்கும் புதிய திட்டம்


ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்கள் மனநலன் காக்கும் புதிய திட்டம்
x

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் மாணவர்கள் மனநலன் காக்கும் புதிய திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில், கல்லூரி மாணவர்கள் மனநலன் காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் (மனம்) என்ற புதிய திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் மாணவர்களுக்கு 'மனம்' தூதுவருக்கான பதக்கத்தை அணிவித்தார். மத்திய அரசின் 'லக் ஷயா' திட்டத்தின் கீழ் 161 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உத்தரவாத சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

மனநல நல்லாதரவு மன்றத்தின் சுருக்கம் தான் 'மனம்'. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. மனநலன் பாதுகாப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் அவசியமானது. குழந்தைகள் முதல் முதியோர் வரை மனஅழுத்தம் இல்லாதவர்கள் யாரும் இல்லை.

சாணி பவுடர்

தற்கொலைகளை தடுப்பதற்கு அதன் காரணிகளை அழித்தாலே அதன் தாக்கம் பெருமளவு குறையும். மனஅழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கும் இளம் பெண்களில் 90 சதவீதம் பேர் சாணிபவுடரையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் எலி பாசனம், விவசாயிகளின் தேவைகளுக்கு பெரிதும் பயன்பட்டாலும் அதுவும் ஒரு உயிர்கொல்லியே. எனவே கடைகளில் உயிர்கொல்லி பொருட்களை வெளிப்படையாக வைத்து விற்க கூடாது. மறைத்து வைத்துதான் விற்க வேண்டும்.

எலி பாசனம் போன்றவற்றை வாங்க தனியாக வருபவர்களுக்கு அதனை விற்க கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டு, அதனை போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். விரைவில் இது குறித்து அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

தொடர் கண்காணிப்பு

நீட் தேர்வு மட்டுமில்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் கூட தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 104 என்ற ஆலோசனை மையத்தின் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 564 மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

அவர்கள், மனநல ஆலோசகர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக தான் மாணவர்களுக்கு என இந்த 'மனம்' திட்டம் மருத்துவ கல்லூரிகளில் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த மாணவர்களுக்கு கல்லூரிகளிலே பயிற்சி கிடைத்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story