நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக எய்ட்ஸ் தினம்
ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ஒவ்வொரு தனிநபரும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு "சமப்படுத்துதல்" என்பனவற்றை மையக்கருத்தாக கொண்டு அனைத்து நிலையிலும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல்லில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுதல், துண்டு பிரசுரங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். நாமக்கல் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மணிக்கூண்டு, திருச்சி சாலை, போலீஸ் நிலையம், டாக்டர் சங்கரன் சாலை வழியாக சென்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முடிவுற்றது.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் டாக்டர் சித்ரா உள்பட மருத்துவர்கள், பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
இந்த நிகழ்ச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.