நாமக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்
நாமக்கல்:
நாமக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி 50 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திட்டமிட்டனர். ஆனால் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்த சமீபத்தில் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய ஊர்வலத்துக்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை வள்ளிபுரம் சீனிவாச பெருமாள் கோவில் பூசாரி சடையப்பன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பஸ் நிலையம், திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை, அய்யப்பன் கோவில், சந்தைபேட்டைபுதூர் வழியாக சென்று மீண்டும் பூங்கா சாலையை வந்தடைந்தது.
பொதுக்கூட்டம்
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தை சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்க தலைவர் சிதம்பரம் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஆர்.எஸ்.எஸ். மாநில விளையாட்டு பிரிவு செயலாளர் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடை அணிந்து திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தையொட்டி நாமக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.