அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு-வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்


அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு-வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுவை மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதாமல் புறக்கணித்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பொதுத்தேர்வுகளை எழுதவில்லை.

இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாலை அணிவித்து வரவேற்பு

அரூர் கல்வி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொ.மல்லாபுரம் அரசு தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி வாகன பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஷகில் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் பழனி, பேரூராட்சி தலைவர் சாந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹசீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வளர்மதி வரவேற்றார்.

இந்த ஊர்வலத்தின் போது, முதலாம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் புதிதாக சேர்ந்த 9 மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். மேலும் ஊர்வலத்தின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

விழிப்புணர்வு

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஷகில் அரசு பள்ளிகளில் படிப்பதால் மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

இதில் தலைமை ஆசிரியர்கள் மணிவண்ணன், சேகர் மற்றும் உதவி ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், பெற்றோர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பென்னாகரம் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது. பென்னாகரம் அருகே உள்ள செங்கனூர், சின்னபள்ளத்தூர், பெரியபள்ளத்தூர் ஆகிய கிராமங்களில் இந்த வாகன பிரசாரம் நடந்தது. சின்னபள்ளத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார்.

வட்டார கல்வி அலுவலர்கள் மணிகிருஷ்ணன், துளசிராமன், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். அரசின் நல திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை முதல் வகுப்பில் இருந்தே அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

பிரசாரத்தின்போது, அரசு பளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, கல்பனா, பழனி செல்வி, ராஜேஸ்வரி, ரேகா, சத்துணவு அமைப்பாளர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story