பரமத்திவேலூரில் மே தின ஊர்வலம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் மின் பணியாளர்கள், மின் மோட்டார் மின் பணியாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் தொழிலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பரமத்திவேலூர் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக சென்று நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து அங்கு தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. நகர தி.மு.க. செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தொழிற் சங்க தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தன்று அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் அனைவரும், நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அனைத்து நலத்திட்டங்களையும் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.