ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை 10 நாட்கள் நடத்த வேண்டும்


ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை 10 நாட்கள் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை மீண்டும் 10 நாட்கள் நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை மீண்டும் 10 நாட்கள் நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராமேசுவரம் கோவில்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும். அதுபோல் இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ஆண்டுதோறும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்கம் பிரதிஷ்டை திருவிழா மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா

அது போல் ராமேசுவரம் கோவில் உருவாக காரணமான மிக முக்கிய திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவில் உருவான காலத்தில் இருந்து 10 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாகவே ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய திருவிழாவானது 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முதல் நாள் ராவண சம்ஹாரமும், இரண்டாவது நாள் விபிஷ்ணர் பட்டாபிஷேகமும், 3-வது நாள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகின்ற 27-ந் தேதி அன்று தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 27-ந்தேதி அன்று மாலை 5 மணி அளவில் திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே ராமபிரான் பத்துதலை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

விழாவில் 2-வது நாளான 28-ந் தேதி அன்று கோதண்டராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷணர் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மூன்றாவது நாளான வருகின்ற 29-ந்தேதி அன்று கோவிலில் ராமலிங்க பிரஷ்டை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10 நாட்கள் நடத்த கோரிக்கை

உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மாதத்திற்கு உண்டியல் வருமானம், தீர்த்தம், தரிசனம் தங்கும் விடுதி என பல வழிகளிலும் பக்தர்கள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை கொடுக்கும் இந்த கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையோ மீண்டும் வழக்கம்போல் 10 நாட்கள் வருகின்ற ஆண்டில் இருந்தாவது நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோல் ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோவிலின் தல வரலாற்றை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமபிரான் பூஜை செய்வது போன்று அருகில் ஆஞ்சநேயர் மற்றும் முனிவர்கள் உள்ளிட்டோர் நிற்பது போன்று ராமலிங்க பிரதிஷ்டை சிற்பக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிற்பக்கூடத்தில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் சேதமடைந்தும் வர்ணங்கள் உதிர்ந்தும் பொலிவிழந்தும் காட்சி அளித்து வருகின்றது. இந்த ராமலிங்க பிரதிஷ்டை சிற்ப கூடத்தில் உள்ள சிலைகளை சீரமைத்து புனரமைத்து வர்ணம் அடிப்பதற்கோ கோவில் நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராமலிங்கபிரதிஷ்டை சிற்பக்கூடத்தை மிகுந்த மனவேதனையுடன் பார்த்து செல்கின்றனர். ஆகவே சிற்ப கூடத்தில் உள்ள சிலைகளையும் சீரமைத்து வர்ணங்கள் பூசி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story