ஜெர்மனி, அமெரிக்காவுக்கு செல்லும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்
ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஏற்றுமதியாகி வருகிறது.
ராமநாதபுரம்,
ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஏற்றுமதியாகி வருகிறது.
மிளகாய் வணிக வளாகம்
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை செல்லும் வழியில் எட்டிவயல் கிராமத்தில் மாவட்ட வேளாண் மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மிளகாய் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த முண்டு மிளகாய்(அதாவது குண்டு மிளகாய்), குச்சி மிளகாய் உள்ளிட்டவைகளை நேரடியாக கொண்டு வந்து சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, மிளகாய் வியாபாரிகள் உள்ளுர் வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து இந்த வணிக வளாகத்தில் மிளகாயை கொள்முதல் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இந்த வணிக வளாகத்தில் இருந்து மிளகாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கும், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. இந்த மிளகாய் வணிக வளாகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சேமித்து வைக்கப்பட்டுள்ள குண்டு மிளகாய் உள்ளிட்ட பல விவசாய பொருட்களை மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் ராஜா, மேற்பார்வையாளர் மங்களசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பாளர் சரவணகுமார் உடன் இருந்தார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
3 ஆயிரம் மூடை
ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் சுமார் 2 ஆயிரம் டன் பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய வணிக வளாகம் ஆகும். இந்த ஆண்டு மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் 3 ஆயிரம் மூடை குண்டு மிளகாய் பெறப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மூடை குண்டு மிளகாய் 20 கிேலா எடை கொண்டது. தற்போது இந்த வணிக வளாக சேமிப்பு கிடங்கில் 100 டன் மிளகாய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதனை ஆயிரம் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 1 கிலோ மிளகாய் வத்தல் ரூ.245 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குச்சி மிளகாய் வத்தல் ரூ.180 என விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதே குண்டு மிளகாய் கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.400 எனவும் குச்சி மிளகாய் ரூ.200 எனவும் விலை போனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் வத்தல் விலை குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாத சீசன் சமயத்தில் ரூ.180 வரை மட்டுமே விலை போனதால் தற்போது விலை சற்று உயர்ந்துள்ளது என கூறலாம்.
புவிசார் குறியீடு
இதனால் வியாபாரிகள் மிளகாயை கொள்முதல் செய்து ராமநாதபுரத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். தற்போது ஆந்திரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிளகாய் வத்தலின் தேவை சற்று குறைந்துள்ளதால் இங்கும் விலை குறைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளதோடு, 4 மாவட்டங்களை ஒருங்கிணைத்து மிளகாய் சாகுபடி மண்டலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மிளகாய்க்கு இன்னும் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் எக்டேரில் முண்டு மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது. மிளகாய் மட்டுமின்றி பேரிச்சை, தட்டப்பயிறு, மல்லி, பருப்பு போன்றவையும் இந்த வணிக வளாகத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்த வகையில் செலவினம் போக ரூ.12 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு தற்போது வரை ரூ.17 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.