ராமநாதபுரம் நகராட்சி 17-வது வார்டில் புதிதாக ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை-கவுன்சிலர் ஜோதிபுஷ்பம் நேதாஜி தகவல்
ராமநாதபுரம் நகராட்சி 17-வது வார்டில் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுன்சிலர் ஜோதிபுஷ்பம் நேதாஜி தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகராட்சி 17-வது வார்டில் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவுன்சிலர் ஜோதிபுஷ்பம் நேதாஜி தெரிவித்தார்.
17-வது வார்டு
ராமநாதபுரம் நகராட்சி 17-வது வார்டில் துரைராஜ் சத்திரதெரு, கவராயர்தெரு, வள்ளல்பாரி தெற்கு மற்றும் வடக்குத்தெரு, தையல்காரத்தெரு, தெற்குரதவீதி, தெற்குத்தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த வார்டு தி.மு.க.செயலாளர் நேதாஜியின் மனைவி ஜோதிபுஷ்பம் வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த வார்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கவுன்சிலர் ஜோதிபுஷ்பம் நேதாஜி கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 17-வது வார்டில் வள்ளல்பாரி தெற்குதெருவில் பேவர்பிளாக் சாலை, கவராயர்தெரு, தையல்காரத்தெருவில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள காளிகாதேவி அம்மன் கிழக்கு, தெற்குத்தெரு, தெற்குரதவீதி, தர்ப்பசயனம் ரோடு, துரைராஜ் சத்திரதெரு, வள்ளல்பாரி வடக்குதெரு ஆகிய பகுதிகளில் உடனடியாக புதிய சாலைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் வகுப்பறை கட்டிடம்
இங்கு உள்ள காளிகாதேவி அம்மன்கோவில் ஊருணியை தூர்வாரி நடைமேடை அமைக்க வேண்டும். நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள தாய்சேய் நலவிடுதிக்கு பின்புறம் உள்ள பல்வாடி மைய நுழைவு வாயிலை முன்பகுதிக்கு மாற்ற வேண்டும்.
வார்டில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரைவில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வார்டு முழுவதும் சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை குறித்த புகார்கள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு கழிவுநீர் அகற்றப்படுகிறது. வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது. குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதை தடுக்க தெற்குரதவீதி அருகே தர்ப்பசயன ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி கம்பி வேலி அமைக்கவேண்டும்.
புதிய ரேஷன்கடை
வார்டு முழுவதும் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு வசதி அமைக்க வேண்டும். மதுரையார் தெருவில் உள்ள ரேஷன்கடையில் அதிக எண்ணிக்கையிலான கார்டுகள் உள்ளதால் ரேஷன் பொருள் வினியோகம் தாமதமாகிறது. பொதுமக்கள் வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப 17-வது வார்டு மக்களுக்கு என தனியாக புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தர சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன். நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர், நகராட்சி அலுவலர்கள், அனைத்து பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி 17-வது வார்டு மக்களின் மேற்கண்ட கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றித்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.