ராமநாதபுரத்தில் ஓட்டல்களில் அதிரடி சோதனை

ராமநாதபுரத்தில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.
துரித உணவு கடைகளில் விற்கப்படும் சவர்மா சிக்கனை குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு சவர்மா சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள துரித உணவகங்கள், சவர்மா சிக்கன் விற்பனை செய்யக்கூடிய அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு உணவகங்களில் கருகிப்போன நிலையில் இருந்த மற்றும் சரியாக வேகாத 6.5 கிலோ சிக்கன், 42 கிலோ பிளாஸ்டிக் பைகள், 8 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு ரூ.6,200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பாலுசாமி, குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.






