தொழில் வர்த்தக சங்க தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா தேர்வு
தொழில் வர்த்தக சங்க தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா தேர்வு செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 85-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமையில் பி. எஸ். குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார். செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் நாராயணசாமி முதன்மை விருந்தினரை வரவேற்றார். கூட்டத்தில் ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட்ராமராஜா பேசியதாவது:- ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை பணி, புறவழிச்சாலை ஆகிய திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயில்வே சுரங்கப்பாதையையும் விரைந்து முடிக்க வேண்டும். கூடுதல் ரெயில் வசதிகள், மின் மயமாக்கல் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க கோரி தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மேலும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் வணிகர்களை மட்டுமல்லாது பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை பரிசு வழங்குதல், கின்னஸ் சாதனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மீண்டும் தொழில் வர்த்தக சங்க தலைவராக ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட்ராமராஜா, துணைத் தலைவர்கள் ஸ்ரீ கண்டன் ராஜா, பத்மநாபன், செயலாளராக வெங்கடேஸ்வர ராஜா, நாராயணசாமி, பொருளாளர் ராமராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் இணைச் செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.