ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் 700 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்,

15 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
2 விசைப்படகுகள் மற்றும் 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்டுக் கொண்டு வரக்கோரியும் ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடிக்க செல்லவில்லை
இதனால் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் துறைமுகப்பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.