தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் விசைப்படகுகள் கரை திரும்பின


தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் விசைப்படகுகள் கரை திரும்பின
x

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் விசைப்படகுகள் கரைதிரும்பின. இறால் மீன்களுக்கு இந்த ஆண்டாவது உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் விசைப்படகுகள் கரைதிரும்பின. இறால் மீன்களுக்கு இந்த ஆண்டாவது உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தடைக்காலம் முடிந்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகள் நேற்று இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட பலவகையான மீன்களுடன் கரை திரும்பின. இறால், கணவாய், சங்காயம் உள்ளிட்ட மீன்களை படகிலிருந்து இறக்கி வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் டீசல் மற்றும் ஐஸ் கட்டிகளை ஏற்றிவிட்டு மீன்பிடிக்க புறப்பட்டனர். கொண்டு வரப்பட்ட மீன்களை தரம்பிரிக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

சிறிய விசைப்படகுகள் மீன்களை இறக்கிவிட்டு மீண்டும் மீன் பிடிக்க சென்றாலும் 400-க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் ஏதும் கரை திரும்பவில்லை. மொத்தத்தில் மீன் பிடிக்க சென்றுள்ள அனைத்து விசைப்படகுகளும் இன்று காலையில் கரை திரும்பி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இறால், கணவாய் மீன்கள் சிக்கின

இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசு ராஜா கூறியதாவது:-

61 நாள் தடைக்காலம் முடிந்து ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று திரும்பி வருகின்றன. இறால், கணவாய், நண்டு, சங்காயம் உள்ளிட்ட மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக கரை திரும்பி அதை வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஐஸ் கட்டி, டீசல் உள்ளிட்டவைகளை ஏற்றிவிட்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று விட்டனர்.

கரை திரும்பிய படகுகளில் சராசரியாக 50 லிருந்து 80 கிலோ வரையிலான இறால் மீன்கள் கிடைத்துள்ளன. கணவாய் 50 கிலோ, நண்டு 50 கிலோ, சங்காயம் மீன்கள் 200 லிருந்து 300 கிலோ வரை கிடைத்துள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

விலை நிர்ணயம்

மீனவர்கள் எதிர்பார்த்த அளவு இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் ஓரளவு பரவாயில்லை. ஆனால் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட எந்த வகை மீன்களுக்கும் இதுவரை வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. அனைத்து படகுகளும் கரை திரும்பிய பின்னர் தான் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களுக்கும் என்ன விலை? என்பது தெரிய வரும். ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பது கிடையாது. இந்த ஆண்டாவது நல்ல விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்


Related Tags :
Next Story