ராமேசுவரம், பாம்பன் விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை கல்வீச்சு


ராமேசுவரம், பாம்பன் விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை கல்வீச்சு
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:46 PM GMT)

நடுக்கடலில் மீன்பிடித்தபோது ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்கினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

நடுக்கடலில் மீன்பிடித்தபோது ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்கினர்.

இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குவதும், விரட்டியடிப்பதுமான சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

2 நாட்களுக்கு முன்புகூட ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர். இலங்கை கடற்படை அச்சுறுத்தலால் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் மிகவும் குறைந்த அளவிலான விசைப்படகுகளே மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தன. அந்த படகுகள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தன.

அப்போது, அந்த பகுதியில் 3 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

கப்பல்களை அங்கு நிறுத்திவிட்டு, ராமேசுவரம் படகுகளை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் படகுகளை பறிமுதல் செய்து விடுவார்களோ என்று பயந்துபோன ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் அவசர அவசரமாக கரை திரும்பினார்கள்.

பாம்பன்

இதே போல் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை நிறுத்தி கற்கள் வீசி, அந்த பகுதியில் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் உள்ள மீனவர்கள் மீது அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியத்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story