எஸ்.புதூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மஞ்சுவிரட்டு
எஸ்.புதூர் அருகே குமரமுடைய அய்யனார் கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு உலகம்பட்டி, புதுவாடி, ஆரணிபட்டி, படமிஞ்சி, கண்டியாநத்தம் முத்திரி காடன் ஆகிய 5 ஊர் மக்கள் இணைந்து உபயகண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தினர். முன்னதாக கோவிலில் சாமி கும்பிட்டு வேட்டி, துண்டு மற்றும் பரிசு பொருட்களுடன் கிராம மக்கள் தொழுவை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து முதலில் மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகள்
இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அனைத்து காளைகளுக்கும் கிராம மக்கள் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் சில காளைகள் பிடிபட்டும், பல காளைகள் பிடிபடாமல் மாடுபிடி வீரர்களிடம் இருந்து தப்பியோடியது. இந்த மஞ்சு விரட்டில் 2 பேர் படுகாயமடைந்தும், 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் மீது வழக்கு
இந்த மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடைபெற்றதாக உலகம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி விஜய் கொடுத்த புகாரின் பேரில், உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், வேலு, புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த குழந்தை ராஜ், ஆரணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியண்ணன் ஆகிய 5 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.