குமரியில் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்;முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


குமரியில் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்;முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ரமலான் நோன்பு

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ஈகை திருநாளாக இதை கொண்டாடுகிறார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாதம் வரை முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்வார்கள்.

நோன்பு சமயத்தில் சூரிய உதயத்துக்கு முன்பு உணவருந்தி விட்டு, சூரியன் மறையும் வரை உணவு, தண்ணீர் இன்றி இருப்பார்கள். பின்னர் மாலையில் இப்தார் விருந்து மேற்கொள்வார்கள். ரமலான் நோன்பு கடைப்பிடிப்பது முஸ்லிம்களின் 5 கோட்பாடுகளில் ஒன்றாகும். அதன்படி தமிழ்நாட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது.

குமரியில் ரம்ஜான் கொண்டாட்டம்

இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் பள்ளிவாசல்களில் திரண்டு சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். மேலும் பெரிய மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழுகை முடிந்ததும் ஒவ்வொருவரும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஆதரவற்றவர்கள், ஏழைகள், முதியவர்களுக்கு உணவு அளித்து முஸ்லிம்கள் ரம்ஜானை கொண்டாடினர். நாகர்கோவிலில் வடசேரி, கோட்டார், இடலாக்குடி, இளங்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

இதேபோல குளச்சல், தக்கலை, திருவிதாங்கோடு, மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, திட்டுவிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரம்ஜான் தொழுகை நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தனித்தனியாக தொழுகை நடத்திய பிறகு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த 20-ந் தேதியன்று பிறை தென்பட்டதையடுத்து நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அதன்படி நாகர்கோவில் இடலாக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் சில இடங்களில் நேற்றுமுன்தினம் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story