நாகை மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
நாகை மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
திட்டச்சேரி பகுதியில் நேற்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாடினர். திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதேபோல் கோட்டூர், வடகரை, ஏனங்குடி, வவ்வாலடி, கட்டுமாவடி, பண்டாரவாடை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
கீழ்வேளூர், ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி, சங்கமங்கலம், நீலப்பாடி குருக்கத்தி, கூத்தூர் இரட்டைமதகடி, இருக்கை, இறையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
இதேபோல் நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்களில் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வேதாரண்யம் நகர் பகுதி தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஜமாத் மன்ற தலைவா் சாபி, தலைமை இமாம் சாகுல்அமீது, நாகை முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன்அன்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.