நெல்லையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை


நெல்லையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x

நெல்லையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் விரிவாக்கம் பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளிவாசல் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை, மதீனா சி.பி.எஸ்.இ. பள்ளி திடலில் நேற்று காலை நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தொழுகை நடத்தி ரம்ஜான் உரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா, பக்கீர் முகம்மது லெப்பை, பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி, ஜவஹர், தாவுத் ஹாஜியார், முஸ்தபா, ஜெய்னுல்ஆப்தீன் ஜமாத் நிர்வாகிகள், பெண்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

த.மு.மு.க.

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய பிரசார பேரவை சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பாசில்ஷா பிர்தவுசி பெருநாள் உரையாற்றினார். காஜா மைதீன் ரியாஜி பெருநாள் தொழுகை நடத்தினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் கோல்டன் காஜா, பொருளாளர் தேயிலை மைதீன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான அரிசி, உணவுப்பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், மேலப்பாளையம் மாநகராட்சி ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி சிறப்பு தொழுகை நடத்தி பெருநாள் உரையாற்றினார். இதில் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், நெல்லை மாவட்டத்தில் 30 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

டவுன்

மேலப்பாளையம் சுன்னத் ஜமாத் சார்பில் ஜின்னா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். ஹைதர் அலி மிஸ்பாகி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லை டவுன் பாட்டபத்து ஜிம்மா பள்ளிவாசலில் மவுலவி முகமதுரபிக் பைஜு சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் ஜமாத்தலைவர் பாடகர் அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் பட்டபத்து முகமது அலி, தென்மண்டல இளைஞரணி தலைவர் கடாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டவுன் லாலுகாபுரம் ஈத்கா திடலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகி முகமதுஅனஸ் ராஜா, மில்லத் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மகான் ஷெய்கு சிந்தா மதார் ஷா (ஒலி) ஈத்கா திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் தலைவர் எம்.கே.எம்.செய்யது அகமது கபீர், செயலாளர் எம்.கே.எம்.முகமது ஷாபி, பொருளாளர் அஷரப்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை பகுதியில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகராட்சி சார்பில் சுகாதார பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.


Next Story