வேலூரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
வேலூர் மாவட்டம் முழுவதும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து ஈக்தா மைதானம், மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
அதே போன்று வேலூர் சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், அல்லாபுரம், மக்கான், டிட்டர்லைன், சத்துவாச்சாரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
சிறப்பு தொழுகை
சிறப்பு தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைகளை குலுக்கியும் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்கள், ஏழை, எளிய மக்கள், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் பிரியாணி வழங்கி அன்பை வெளிப்படுத்தினார்கள்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 900-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேரணாம்பட்டு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
பேரணாம்பட்டில் பெரிய ஈத்கா, சிறிய ஈத்கா, நவாப் மஸ்ஜித், ஏரிகுத்திமேடு அப்ரார் ஈத்கா, தவ்ஹீத் திடல், கோழிப்பண்ணை உள்ளிட்ட 6 இடங்களில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியாக சிறப்பு தொழுகை நடந்தது.
தொழுகையின் போது சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல பேரணாம்பட்டு அருகே உள்ள வளத்தூர், இதயாத்பூர், எம்.வி.குப்பம்-புதூர், அழிஞ்சிகுப்பம், குளிதிகை, வசந்தபுரம் ஆகிய 6 கிராமங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பேரணாம்பட்டில் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவபிரசாத், குப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேம்பள்ளி கூட்ரோடு, சித்தூர் ரோடு அரபிக் கல்லூரி, மேல்ஆலத்தூர், சரக்குப்பம் மற்றும் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுப்பம், ஜிட்டப்பள்ளி, காத்தாடிகுப்பம், ஆர்.கொல்லப்பல்லி, பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமிரெட்டிபல்லி, பரதராமி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து அனைத்து மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு இனிப்புகளும் வழங்கி மகிழ்ந்தனர்.
சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் தொழில் அதிபர்கள் முகமதுஅமீன் சாகிப், முகமதுஅஷரப் சாகிப், முகமதுசித்திக் சாகிப், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, பாலசுப்பிரமணியம் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.