ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை


ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
x

ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் முரத்தால் அடி வாங்கினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, ரஞ்சன்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றுதலுடன் தொடங்கியது. நேற்று மயான கொள்ளை நடந்தது. இதையொட்டி நேற்று காலை அருகே உள்ள தேவையூர் மயானம் சென்று அம்மன் உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்திற்கு மயானத்திற்கு வந்தார். மதியம் 1.30 மணிக்கு மயானத்தில் பூஜை செய்து மயான கொள்ளை நடைபெற்றது. மயானத்தில் குட்டி குடிக்கப்பட்டு, உதிர சோறு வைத்து படையலிடப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உதிர சோறு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் குழந்தை இல்லா தம்பதிகள், திருமணமாகாதவர்கள், வேண்டுதல் நிறைவேற பக்தர்களும் பக்தி பரவசத்துடன் உதிர சோற்றை மடிப்பிச்சையாக பெற்று கொண்டனர். கடந்த ஆண்டு உதிர சோறு பெற்று குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் தங்களது குழந்தைகளை அம்மன் மடியில் வைத்து வழிப்பட்டு சென்றனர். இதில் ரஞ்சன்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தங்களது வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் காளி வேடமிட்ட மருளாளிகளிடம் முரத்தால் அடி வாங்கினர். அம்மன் வீதி உலா வரும் பாதையில் பக்தர்கள் அன்னம் படைத்து மக்களுக்கு வழங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந்தேதி மாலையில் நடக்கிறது. அதனை தொடர்ந்து தீமிதித்தல் நடைபெறுகிறது.


Next Story