ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் முழு உருவ சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார்.
சென்னை,
ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் 15.11.1869 அன்று பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909-ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கி உள்ளார்.
1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இந்த குடிநீர்ப்பிரச்சினைகளை தீர்த்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார். அவரை போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையினை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.