15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
போக்சோ வழக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35). இவர் 15 வயது சிறுமியை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இதனை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் காமராஜ் மிரட்டியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கதறி அழுததால் பரபரப்பு
நீதிபதி தீர்ப்பு அளித்ததும், குற்றவாளியை சிறையில் அடைக்க அழைத்து செல்ல உத்தரவிட்டார். அப்போது கோர்ட்டின் உள்ளே இருந்த காமராஜ் கதறி அழுதார். தொடர்ந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் கோர்ட்டின் வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அவர் கதறி அழுதார். இதனால் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.