வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய்ச்சல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் அடிக்கிறது. இதனால் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, தொடர் இருமல், உடல் வலி போன்ற நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கி உள்ளதாலும், குடிநீருடன், கழிவுநீர் கலப்பதாலும், கொசுத்தொல்லையின் காரணமாக பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு உடம்பு வலி அதிகமாக இருப்பதாகவும், கால்கள் நடக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படுதவாதகும் கூறப்படுகிறது. இதனால் வயதானவர்கள் சிக்குன் குனியா போன்ற நோய் மீண்டும் வருகிறதோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் கூட்டம்
திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒருநாளை 500 முதல் ஆயிரம் பேர் வரை புற நோயாளிகளாக வந்து சென்றனர். தற்போது காய்ச்சல் காரணமாக ஒருநாளைக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இதே போல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கட்டுகடங்காமல் கூட்டம் உள்ளது. ஏராளமான பெண்கள் தங்கள் கைக்குழுந்தையுடன் சிகிச்சைக்காக காத்து இருகின்றனர்.
இதேபோல் திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அனைத்துதரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி போன்ற மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
கட்டுப்படுத்த வேண்டும்
எனவே மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்ட போது மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை அணுக வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என கூறினார்.