வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்


மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர்

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

சிவகாசி

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதிலும் குறிப்பாக சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய்களுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அதேபோல் பன்னீர் தெப்பத்துக்கும் அதிகளவில் தண்ணீர் வருகிறது. மேலும் சிவகாசி பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது சிவகாசி பசுமை மன்றம் சார்பில் செங்குளம் கண்மாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கழிவுகளால் நிரம்பி இருந்த செங்குளம் கண்மாயின் ஒரு பகுதியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. அடுத்து வரும் நாட்களிலும் இதேபோல் தொடர் மழை பெய்தால் கடந்த ஆண்டு சிறுகுளம், பெரியகுளம் நிரம்பியது போல் இந்த ஆண்டும் 2 கண்மாய்களும் நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளூர், வெற்றிலையூரணி, பள்ளப்பட்டி, மீனம்பட்டி, திருத்தங்கல் ஆகிய பகுதியில் 6 வீடுகள் சேதம் அடைந்தது. இதுகுறித்து தாசில்தார் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் வறண்டு கிடந்த துலுக்கன்குறிச்சி ஊருணி, வால்சாபுரம் கண்மாய், தாயில்பட்டி பெரிய கண்மாய், சங்கரபாண்டியபுரம் ஊருணி, குகன்பாறை ஊருணி, பேர்நாயக்கன்பட்டி கண்மாய் உள்பட மேலும் சில கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூர்சாகிபுரம் உள்ளது. இங்கு 30 கிராமங்களுக்கு இந்த ஊர் வழியாக செல்ல வேண்டும். இப்பகுதியில் பெய்த மழையினால் இங்குள்ள ெரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியது.

இந்தநிலையில் இங்கு தேங்கிய மழைநீரில் அரசு பஸ் ஒன்று சிக்கிக்கொண்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் வெளியே வந்தது.

செங்கல் உற்பத்தி பாதிப்பு

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலாக செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த பகுதியில் பெய்த தொடர்மழையினால் செங்கல் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழையால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் சேதம்

மல்லாங்கிணறு பகுதியில் மல்லாங்கிணறு, சூரம்பட்டி, அயன்ரெட்டியபட்டி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் 6 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இதுபற்றி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story