அரியமான் கடற்கரையில் அரிய வகை சங்கு, சிப்பிகள் கரை ஒதுங்கின


அரியமான் கடற்கரையில் அரிய வகை சங்கு, சிப்பிகள் கரை ஒதுங்கின
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:45 PM GMT)

உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் அரிய வகை சங்கு மற்றும் சிப்பிகள் கரை ஒதுங்கின.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் அரிய வகை சங்கு மற்றும் சிப்பிகள் கரை ஒதுங்கின.

மன்னார் வளைகுடா கடல் பகுதி

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு உள்ளிட்ட பல அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் இந்த கடல் பகுதியில் ஏராளமான சங்கு மற்றும் சிப்பி வகைகளும் இயற்கையாகவே அதிக அளவில் உள்ளன.

அதில் குறிப்பாக தட்டு சிப்பி, வரி சிப்பி, கோபுர சிப்பி மற்றும் வாழைப்பூ சங்கு, மாட்டு தலை சங்கு, பைனாப்பிள் சங்கு, வெள்ளை பூண்டு சங்கு, அடுக்கு சிப்பி, புள்ளி சோவி, குதிரைமுள்ளி சங்கு, தேள் சங்கு, பூரான் சங்கு, கூம்பு சங்கு உள்ளிட்ட பல அரிய வகை சங்கு மற்றும் சிப்பிகளும் கடலுக்குள் உள்ளன. இதுபோன்ற சிப்பி மற்றும் சங்கு வகை உயிரினங்கள் மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணியாகவும் விளங்கி வருகின்றது.

கரை ஒதுங்கின

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் பல இடங்களில் அரிய வகை சங்கு மற்றும் சிப்பிகள் பரவலாக கரை ஒதுங்கி கிடக்கின்றன. அரியமான் கடற்கரையில் இருந்து பிரப்பன்வலசை மற்றும் ஆற்றங்கரை வரையிலான கடற்கரை பகுதிகளில் பல அரியவகை சங்கு, சிப்பிகள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

இது போன்ற கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பி மற்றும் சங்குகளை அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் வீடுகளுக்கு எடுத்து செல்கின்றனர்.கடல் நீரோட்டத்தின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தால் சங்கு, சிப்பிகள் சேதம் அடைந்த நிலையில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் மிக முக்கிய காரணியாக விளங்கும் அரிய வகை சங்கு மற்றும் சிப்பிகள் இதுபோன்று கரை ஒதுங்கி வருவதால் மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் உள்ள மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிக முக்கியமாக இருந்து வரும் பவளப்பாறை கற்கள் உடைந்து சேதம் அடைந்து கரை ஒதுங்கி வரும் நிலையில் தற்போது ஏராளமான சங்கு மற்றும் சிப்பிகளும் கரை ஒதுங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story