தொழிலாளி வீட்டுக்கு ரூ.2¼ லட்சம் மின்கட்டணம்


தொழிலாளி வீட்டுக்கு ரூ.2¼ லட்சம் மின்கட்டணம்
x

தொழிலாளி வீட்டுக்கு ரூ.2¼ லட்சம் மின்கட்டணம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சகாய ஆரோக்கிய பெனிட். கூலித்தொழிலாளியான இவரின் வீட்டிற்கு தற்போது மின்கட்டணம் என ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 564 என தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சகாய ஆரோக்கிய பெனிட் ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டார். வழக்கமாக ரூ.150 முதல் 400 வரையில்தான் மின்கட்டணம் செலுத்துவேன். தற்போது ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 564 மின்கட்டணம் வந்தது எப்படி? என்று கேட்டுள்ளார். இதற்கு மின்வாரியத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முத்துப்பேட்டை பகுதிக்கு ரெகுநாதபுரம் துணை மின் நிலைய பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் வந்து மின்கட்டணம் கணக்கிட்டு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதமாக மின்பணியாளர்கள் யாரும் மின்கணக்கீடு செய்ய வருவதில்லை என்றும், மின்வாரிய அலுவலகத்தில் கூறுவதை ஏற்று கடந்த மாத தொகையையோ, அல்லது அவர்கள் தெரிவிக்கும் தொகையையோ செலுத்தி வந்துள்ளனர்.

இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இவ்வாறு ரூ.2¼ லட்சம் மின்கட்டண பில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம் பகுதிகளில் மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன பேனர்கள் வைத்துள்ளனர்.

இதுகுறித்து ரெகுநாதபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் குருவேல் கூறியதாவது:-

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு பில் வந்துள்ளது. ரூ.5 ஆயிரம் வரையிலான மின்கட்டண தொகையை மட்டும்தான் உதவி பொறியாளர் அளவில் சரிசெய்து கட்டும்படி கூற முடியும். அதற்குமேல் உள்ள தொகை என்பதால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். விரைவில் சரிசெய்யப்படும். சரியாக கணக்கீடு செய்யாமல் புகாருக்கு உள்ளான நபர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிய கணக்கீட்டாளர் மூலம் மின்கட்டணம் முறையாக பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story