சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
திருப்பூர்
திருப்பூர் மற்றும் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகளுக்கு வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் நீர் வந்தது. இப்படிப்பட்ட நிலையில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து உள்ளூர் வெங்காயத்தின் வரத்து மெல்ல அதிகரித்ததால் இதன் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த மாதம் சில நேரங்களில் ஒரு கிலோ ரூ.40 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் சமீப காலமாக ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக இதன் விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போது ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் வெங்காயம் விலை உயர தொடங்கியிருப்பது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.
இதேபோல் பீர்க்கங்காய் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பீர்க்கங்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.