சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து
மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டிய பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.
தனியாருக்கு குத்தகை
மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.
சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.
மூட வேண்டும்
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில துணைத் தலைவர் நாட்டான் மாது:-
இந்தியா முழுவதும் காலாவதியான பல சுங்கச்சாவடிகள் சாலை பராமரிப்பு என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. தொப்பூர் சுங்க சாவடிக்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலை பராமரிப்புக்கு பெட்ரோல் மூலம் ரூ.2-ம், டீசல் மூலம் ரூ.1.50-ம் வரியாக வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகும் சுங்கச்சாவடி வசூல் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. காலாவதியான டோல்கேட்டுகளை மூடுவதாக அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சுங்கச்சாவடி மூலம் செலுத்தும் தொகையை லாரி உரிமையாளர்கள் மூலம் நேரடியாகவே செலுத்தி விடுகிறோம். சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு பாதிப்பு
தர்மபுரி லோக்கல் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஜெமினி:-
மணல், ரேஷன் அரிசி உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை உள்ளூர் லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகிறோம். சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் நேரங்களில் ஒரு லாரிக்கு ரூ.2,000 வரை கூடுதலாக கட்டணமாக செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் பல சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை முறையாக ஏற்படுத்தி தருவதில்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக லாரிகளின் வாடகை உயரும். இது விலைவாசி உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். தர்மபுரியில் அதிக வாகன விபத்துகள் நடக்கும் குண்டல்பட்டி, சேசம்பட்டி ஆகிய பகுதிகளில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைத்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெரும்பாலும் இருண்டே கிடக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் மையப்பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று தொப்பூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பல கோடி ரூபாய் வருமானம் வரும் சூழலில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
சுற்றுலா தொழில்
டூரிஸ்ட் வேன் உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் சங்க தலைவர் சக்திவேல்:-
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தற்போது மீண்டும் சுற்றுலா தொழில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில் சுங்க கட்டண உயர்வு சுற்றுலா வாகனங்களை கடுமையாக பாதிக்கும். சுங்கவரி அதிகரிப்பு காரணமாக வாடகை தொகையை உயர்த்தினால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.195 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில நாட்களில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் கூடுதலாக ரூ.150 கட்டணம் வசூலிக்கிறார்கள். சுற்றுலா பயணிகளை மினி பஸ் என்ற கணக்கில் சேர்ப்பதால் இவ்வாறு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சுற்றுலா தொழில் முடங்கி உள்ள நிலையில் சுங்க கட்டண உயர்வு எங்களை போன்றவர்களை கடுமையாக பாதிக்கும். எனவே சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்வாதாரம் பாதிப்பு
தர்மபுரி நகர வாடகை கார் உரிமையாளர்கள் சங்க தலைவர் முல்லைவேந்தன்:-
வாடகை கார் தொழில் ஏற்கனவே நலிவடைந்துள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். வாடகை கார்களுக்கு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகியும் சுங்கச்சாவடிகள் மூடப்படவில்லை. சாலை பராமரிப்பு என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட அனுமதித்தாலும் முறையான பராமரிப்பு இல்லை. டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் ஏறும் சூழலில் கார்களின் வாடகையை அவ்வாறு உயர்த்த முடிவதில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சாலை பராமரிப்பு என்ற பெயரில் காலாவதியான சுங்கச்சாவடிகளுக்கு தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து எங்களைப் போன்றவர்கள் தொழில் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தக் கூடாது.
விலைவாசி உயரும்
மலையனூரை சேர்ந்த காய்கறி வாகன உரிமையாளர் ராஜ்குமார்:-
தினசரி இயக்கப்படும் சரக்கு வாகனங்களில் காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெங்களூர் திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் சுங்க கட்டணம் அதிகரிப்பது எங்களைப் போன்ற வாகன உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். சுங்க கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். இது சரக்கு வாகன கட்டண உயர்வுக்கு வகுக்கும். இதனால் வானங்களின் வாடகை உயரும் போது அதற்கேற்ப பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உணவு தானியங்கள், காய்கறிகள், பூக்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு சுங்கக்கட்டணத்தில் விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
கூடுதல் செலவால் மன உளைச்சல்
கூர்க்காம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார்:-
தற்போது பெரும்பாலான நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கார் வைத்திருக்கிறார்கள். உறவினர்கள் வீட்டு சுக துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று வரவும் தொழில் தொடர்பாகவும் கார் மூலம் பல்வேறு ஊர்களுக்கு சென்று வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்நிலையில் அதிகப்படியான சுங்க சாவடி நிலையங்கள் இருப்பதன் காரணமாக அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், சுங்கக்கட்டணமும் அதிகரித்து கொண்டே செல்வது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவோருக்கு கூடுதல் செலவையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. சாலை வரி கட்டித்தான் வாகனங்களை இயக்குகிறோம். திரும்பவும் சுங்கக்கட்டணம் என்பது சரியானதாக தெரியவில்லை. வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால் டீசல், பெட்ரோலுக்கு இணையாக சுங்கக்கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கிறது. அதுவும் தற்போது குறைந்த கிலோ மீட்டர் தூரத்திலேயே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.