ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் சிக்கினர்

புதுச்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் சிக்கினர்.
ரேஷன் அரிசி
புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் தனித்தாசில்தார் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கதிராநல்லூர் கிராமம் குள்ளப்பநாயக்கன்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 4 மொபட்டுகள் மற்றும் 1 மோட்டார் சைக்கிளை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாகனங்களில் வந்த 5 பேரும் சுமார் 800 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.
5 பேர் சிக்கினர்
மேலும் அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கல்யாணியை சேர்ந்த வடிவேல், செங்கோட்டையன், மாதேஸ்வரன், வெங்கடேசன் மற்றும் குமார் என்பதும், கூடுதல் விலைக்கு விற்க ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகள், 4 மொபட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிபட்ட 5 பேரும், ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வாகனங்களும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.






