மண்எண்ணெய் வழங்காததை கண்டித்துரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
பள்ளிபாளையத்தில் மண்எண்ணெய் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் மண்எண்ணெய் சரிவர பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், குமாரபாளையம் வட்ட வழங்கல் அதிகாரி அகமத் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு மாதந்தோறும் சரியாக மண்எண்ணெய் வழங்குவதில்லை. ஏன் என்று கேட்டால் அவர்கள் சரியாக பதில் அளிப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு வட்ட வழங்கல் அதிகாரி ரேஷன் கடை ஊழியரை எச்சரித்து, பொதுமக்கள் சரியாக மண்எண்ணெய் வழங்க உத்தரவிட்டார். மேலும் இதுபோல் தவறு நடந்தால் பணி இடைநீக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மண்எண்ணெய் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.