ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் 8½ பவுன் நகை, பணம் திருட்டு


ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டில் 8½ பவுன் நகை, பணம் திருட்டு
x

தலைவாசல் அருகே ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே ரேஷன் கடை பெண் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரேஷன் கடை

தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை வெல்கம் நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரகதீஷ்வரன் (17) என்ற மகனும், ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகன், மகளை பள்ளிக்கூடத்துக்கு பஸ் மூலம் அனுப்பி உள்ளார். காலை 10 மணிக்கு நித்தியா வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை 4.30 மணிக்கு பள்ளியில் இருந்து ஹன்சிாக வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் இருந்த செல்போன் மூலம் தனது தாய் நித்தியாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

நகை, பணம் திருட்டு

இதைத்தொடர்ந்து உடனே நித்தியா வீட்டுக்கு வந்தார். அப்ேபாது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8½ பவுன்தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தலைவாசல் போலீசில் நித்தியா புகார் அளித்தார். அதன் பேரில் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரஜினி மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மேலும். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

முகமூடி கொள்ளையர்கள்

தொடர்ந்து தலைவாசல் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில், முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் நகை, பணத்தை திருடிச்செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story