ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
தமிழக அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் பொது விநியோகத்திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உயர்வுடன் வழங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கும் புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும், பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய 3 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.