ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்:
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா கடந்த மாதம் 21-ந் தேதி சிதம்பரத்தில் சமூகவிரோதிகளால் தாக்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடந்த மாதம் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் கடந்த 5-ந் தேதி ஜெயச்சந்திரராஜாவை யாரோ மர்ம நபர்கள், அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்றனர். இச்சம்பவத்தை கண்டித்தும், ஜெயச்சந்திரராஜாவை கொலை செய்ய முயன்றவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சம்பத் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட தலைவர் கோபிநாத், பொருளாளர் ரஷீத், துணைத்தலைவர்கள் பழனிவேல், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஸ்வரன், இணை செயலாளர்கள் குணசேகரன், கதிர்வேல், பன்னீர்செல்வம், இளைஞரணி தலைவர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.