ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர்:

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக ரேஷன் பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும். 5 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த 7-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று 3-வது நாளாக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதை தொடர்ந்து திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம், மாவட்ட இணை செயலாளர் சிவராஜ், நிர்வாகிகள் சதீஷ், வேலாயுதம், குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வேலை நிறுத்தம் காரணமாக 3-வது நாளாக ரேஷன் கடைகள் முடப்பட்டு இருந்தால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

நன்னிலம்

இதேபோல 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் குணசீலன் , சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story