"ரேசன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது" - கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்


ரேசன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது - கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்
x

ரேசன் கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

ரேசன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் ஐ.ஏ.எஸ். சென்னையில் உள்ள அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது;-

"கடந்த 27/6/2022 அன்று நடைபெற்ற பொது விநியோகத் திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தின் நடவடிக்கைகளில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே சரி பார்த்து தரமான அரிசியை மட்டுமே ரேசன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் தரமற்ற அரிசி கண்டுபிடிக்கப்படும் நிகழ்வுகளில் ரேசன் கடை பணியாளர்கள் அவற்றை தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப தனியாக எடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரேசன் கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பண்டங்கள் கிடங்கில் இருந்து நகர்வு செய்யப்பட்டு ரேசன் கடைகளில் லாரிகளில் இருந்து இறக்கும்போதும் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் போதும் அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு கீழே சிந்தும் அத்தியாவசிய பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொருட்களோடு கலந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story