ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Sept 2023 2:45 AM IST (Updated: 14 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரத்தனபுரியில் நடந்து வரும் தொடர் திருட்டு, வழிப்பறியால் அச்்சமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

ரத்தினபுரி

கோவை ரத்தனபுரியில் நடந்து வரும் தொடர் திருட்டு, வழிப்பறியால் அச்்சமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் திருட்டு

கோவை ரத்தினபுரியில் ஜி.பி.எம். நகர், பூம்புகார் நகர், லட்சுமி புரம், பி.எம்.சாமி காலனி, விஸ்வநாதன் புரம் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் தொடர் திருட்டு நடந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 47-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் தலைமையில் ரத்தினபுரி போலீஸ் நிலையம் வந்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

பின்னர் அவர்கள் அந்த போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஸ்குமார் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

49 பவுன் நகை திருட்டு

எங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களாக 7 வீடுகளின் கதவை உடைத்து 35 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஜி.பி.எம். நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி நடந்து உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகையை திருடிச்சென்று உள்ளனர்.

கடந்த 10 நாட்களில் மட்டும் 49 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் போலீசார் சரியாக ரோந்து வராததுதான். அவர்கள் ரோந்து வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்திலும் அச்சத்துடன் இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் பெண்கள் நகையை அணிந்து வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. மேலும் வழிப்பறியும் அடிக்கடி நடந்து வருகிறது.

தக்க நடவடிக்கை

எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து திருட்டு போன நகையை மீட்பதுடன், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனருக்கு தெரிவித்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story