தென்காசி புதிய கலெக்டராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு


தென்காசி புதிய கலெக்டராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, முடிவடையாத தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, முடிவடையாத தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

புதிய கலெக்டர்

தென்காசி மாவட்ட கலெக்டராக இருந்த ஆகாஷ் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலாளராக இருந்த டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் நேற்று காலை 10 மணிக்கு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்காசி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து தகுதியான நபர்களுக்கும் சென்று சேருவதற்கு முழு முயற்சி எடுப்பேன். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முழு மனதுடன் செயல்படுவேன்.

இங்கு சுற்றுலா தலமான குற்றாலம் இருப்பதால் சுற்றுலா துறையுடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து அங்கு என்னென்ன வசதிகள் தேவையோ அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். முன்னாள் மாவட்ட கலெக்டர் என்னென்ன பணிகளை மேற்கொண்டாரோ அந்த பணிகள் முழுமை அடைய முழு கவனம் செலுத்துவேன்.

எந்த நேரத்திலும் அணுகலாம்

மாவட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை அணுகும் வகையில் இந்த அலுவலகம் திறந்திருக்கும். அண்டை மாநிலத்திற்கு கனிம வளம் கொண்டு செல்வது குறித்து அதிகாரிகளை ஆய்வு செய்ய செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். முடிவடையாத தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றாலத்தில் சீசன் நேரத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்று வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் வசதி செய்து கொடுக்க முதல்-அமைச்சரும் கூறியுள்ளார்.

எனவே சுற்றுலாத்துறையுடன் இணைந்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அவை அகற்றப்படும்.

இவ்வாறு கலெக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.

வாழ்க்கை குறிப்பு

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். இவர் எம்.எஸ்சி., எம்.பில். பட்டதாரி. சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று சிவகங்கை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் துணை கலெக்டராக பணியாற்றியுள்ளார்.

தூத்துக்குடி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலுவலராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்று, கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை துணை செயலாளராகவும், பின்னர் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இதன் பிறகு மாநில சிறுபான்மை நல ஆணையத்தில் உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்தார். அங்கிருந்து தென்காசி மாவட்ட கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு அனைத்து துறை உயர் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.



Next Story