போக்சோ வழக்கில் மீண்டும் குறுக்கு விசாரணை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போக்சோ வழக்கில் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
போக்சோ வழக்கில் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
குறுக்கு விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்ற கிஷோர் குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மீதான போக்சோ வழக்கின் விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கின் முதல் 3 சாட்சிகளை மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்த எனது மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகி, கடந்த ஆண்டு 2 முறை குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அப்போது சாட்சிகள் ஆஜராகவில்லை. ஆனால் எந்த தகவலும் இன்றி கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மனுதாரர் வக்கீல் உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்றார்.
உத்தரவு
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வருமாறு:-
போக்சோ வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. மனுதாரர் தரப்பில் தொடர் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரவில்லை. தங்கள் தரப்பு குறுக்கு விசாரணைக்கு தான் அனுமதி கேட்கின்றனர்.
எனவே சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். சாட்சிகள் ஆஜராகும் போது மனுதாரர் தரப்பு குறுக்கு விசாரணை நடத்தாவிட்டால், மறு வாய்ப்பு வழங்கப்படாது. குறுக்கு விசாரணை கோரிய மனுதாரரின் மனு அனுமதிக்கப்படுகிறது. இதற்காக சாட்சிகளுக்கு ஒரு மாதத்தில் சம்மன் அளிக்க வேண்டும். மனுதாரர் ரூ.5 ஆயிரத்தை தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.